Tuesday, December 11, 2012

'நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு' திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்கள்.


சிறிலங்கா அரசு தமிழினத்தின் மீது நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிரான தமிழ்த்தேசியப் பணியினைத் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் திறம்படச் செய்து வந்ததிரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்களை நாம் இழந்து விட்டோம்.
திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்கள் மிக நீண்டகாலமாக அவுஸ்ரேலியாவில் வாழ்ந்துவந்த போதிலும் தனது தாய்மண் மீதான தீராப்பற்றின் காரணமாக 2002ஆம் ஆண்டில் இருந்து தமிழீழ விடுதலைப் பயணத்தில் தானும் சேர்ந்து கொண்டு உறுதி தளராத ஒரு தேசப் பணியாளனாகத் திகழ்ந்தார்.

கிருஸ்ணமூர்த்தி ஆசிரியர் விடுதலைப் போராட்டம் பற்றியும் அதற்கான அவசியம் பற்றியும் நன்குணர்ந்தவர். தாயகத்தில் இளந்தலைமுறையினரை அறிவுமிக்க நாட்டின் சிற்பிகளாக உருவாக்குமாறு தேசம் அவரிடம் கேட்டதற்கமைய அப்பணியினை ஏற்றுப் புதிய அணுகுமுறையுடன் ஆங்கிலமும் கணிதமும் கற்றுக்கொடுத்தார். அவர் ஒரு சிறந்த ஆசிரியரும் நல்ல விளையாட்டு வீரனும் ஆவார். அதனால் வெறும் வகுப்பறைப் போதனை முறைகளை மட்டும் பயன்படுத்துவதோடு நின்றுவிடாது விளையாட்டுத்திடலிலும் மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் கற்றுக் கொடுத்தார். அத்தோடு தேசத்திற்குத் தேவை ஏற்படும் போதெல்லாம் புலம்பெயர் விடுதலைத் தளத்திலும் தனக்கான அரசியற் கடமைகளை ஒரு கணமும் பின்னிற்காது முழுமூச்சுடன் செய்துவந்தார்.

கொடிய நோயினால் உடல் தளர்ந்து கண் மூடும் வேளையிலும் தமிழீழக் கனவுடனேயே அவர் எம்மை விட்டுச்சென்றுள்ளார். திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்களின் பிரிவு தேசியப் பணியில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்களின் பிரிவாற் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும்அவுஸ்திரேலியா வாழ் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ்பேசும் மக்களோடு இணைந்து எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ்த்தேசியப் பணியில் அயராது உழைத்து வந்த திரு.முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கு 'நாட்டுப்பற்றாளர்' என மதிப்பளிப்பதில் நாம் பெருமைகொள்கின்றோம்.
'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'

 ******************************************************************************************************************************************************************************************

நாட்டுப்பற்றாளர் திரு முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி

திரு. முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்கள் இலங்கையின் அரசியல் சூழல் காரணமாக புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்து வந்தாலும், தன் இனம், மண் மீதான அளவுகடந்த பற்று அவரைவிட்டு விலகவில்லை. இதன் வெளிப்பாடே புலத்திலும், புலம்பெயர் தேசத்திலும் தன் இனத்தின் விடுதலைக்காக அவரை இறுதிவரை சோர்வின்றி அயராது உழைக்கத்தூண்டியது.
நாட்டுப்பற்றாளர் திரு கிருஸ்ணமூர்த்தி அவர்கள் வல்வெட்டியில் 1939 ஆவணி மாதம் 02ஆம் நாள் பிறந்து ஹாட்லிக் கல்லூரியில் கல்வி பயின்றார். தனது மாணவப் பருவத்தில் ஒரு விளையாட்டு வீரனாகவும் திகழ்ந்தார். பாடசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் உயரம் பாய்தல், ஈட்டி எறிதல் போன்றவற்றில் பல பதக்கங்களை வென்று, இலங்கை அணிக்காக கைப்பந்தாட்டமும்  விளையாடியவர்.  கணிதத் துறையில் பட்டம் பெற்ற திரு கிருஸ்ணமூர்த்தி அவர்கள் ஹொரண மத்திய கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி ஆகிய இடங்களில் ஆசிரியராகக் கடமையாற்றினார்.

இலங்கையின் அரசியல் சூழல் காரணமாக நையீரிய நாட்டின் பாடசாலை ஒன்றில் அதிபராகப் பொறுப்பேற்று எழுபதுகளில் புலம்பெயர்ந்தார். அதன் பின்னர் 1985ல் தென்னாபிரிக்காவிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆரம்ப காலத்திலிருந்தே தமிழீழ விடுதலைக்காகவும் தமிழரின் விடிவிற்காகவும் பொருளியல் உதவிகளைப் புரிந்து வந்த இவர் தென்னாபிரிக்காவில் இருந்தும் தன்னால் இயன்ற உதவிகளை இடைவிடாது செய்து வந்தார்.

1989ஆம் ஆண்டு குடியுரிமை பெற்று அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்த இவர் அங்கு தேசிய அளவில் புகழ் பெற்ற போல்க்கம் ஹில்ஸ் (Baulkham Hills High School) உயர்தரப்பாடசாலையில் கணித ஆசிரியராக ஓய்வு பெறும் வரை பணியாற்றினார். திரு கிருஸ்ணமூர்த்தியின் கற்பித்தல் முறை மாணவர்களால் மட்டுமன்றி சக ஆசிரியர்களாலும் போற்றப்பட்டது.

2002ல் கொண்டு வரப்பட்ட சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து வன்னி சென்ற நாட்டுப்பற்றாளர்  கிருஸ்ணமூர்த்தி அவர்கள், அங்கு புதிய அணுகுமுறையுடன் கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களைக் கற்றுக் கொடுத்தார். வெறும் வகுப்பறைப் போதனா முறைகளை மட்டும் பயன்படுத்தாது விளையாட்டுத் திடலிலும் மாணவர்களை ஈர்க்கும் வகையில் அவரது கற்பித்தல் அமைந்திருந்தது.

தமிழீழ மக்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருவதால் அந்தந்த நாடுகளிலுள்ள அரசுகளுக்கும் மக்களுக்கும் தமிழீழம் பற்றிய விழிப்புணர்வையும் தமிழ் மக்களிற்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியும் இப் புலம் பெயர்வாழ் மக்களால் எடுத்துக்கூற முடியும் ஆனால் தமிழர்களே இல்லாத சில நாடுகள் உட்பட அமெரிக்கா ஆபிரிக்கா தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து எமது போராட்டம் பற்றி இராஜதந்திர ரீதியில் 2008 வரையில் முழுநேரமாக முன்னின்று செயற்பட்டவர் நாட்டுப்பற்றாளர் கிருஸ்ணமூர்த்தி.


திரு கிருஸ்ணமூர்த்தி என்றால் அது இவரைத் தெரிந்த எல்லோர் மனத்திரையிலும் ஓர் அகராதி போன்று பொருள் படுவது மாஸ்ரர். மாஸ்ரர் மாஸ்ரர் என்று சொல்லி இவரைச் சுற்றி நாள்முழுதும் வட்டமடிக்கும் மாணவர்கள், நண்பர்கள் என எவரையுமே பின் வாங்க வைத்தவரல்ல. தனது அன்பாலும் அறிவாலும் அரவணைக்கும் இவரது மென்மையான பண்பு எவரையுமே எளிதில் இவரது பக்கம் ஈர்த்துவிடும். எந்த ஒரு கஸ்டமான காரியத்தையும் இலகுவாகச் செய்யும்படியான வழிமுறைகளைச் சொல்லி உற்சாகம் கொடுத்து தற்துணிவிற்கு அடித்தளமிடுவதிலும் திரு கிருஸ்ணமூர்த்தி அவர்கள் விளங்கினார்.

செயலுக்கே முக்கியத்துவம் கொடுத்த திரு கிருஸ்ணமூர்த்தியின் நாட்டிற்கான செயற்பாடுகளோ அல்லது உழைப்பு பற்றியோ அவரது குடும்பத்தினருக்கோ அல்ல நண்பர்களுக்கோ அதிகம் தெரியாது. இந்த நிலையில் இவரைக் கொடிய நோய் தாக்கினாலும்கூட இறுதிமூச்சு வரை தமிழீழக் கனவுடனே உயிர் பிரிந்தார். இப்படியான ஒரு இனிமையான, நேர்மையுள்ள மனிதரின் இழப்பானது எமது விடுதலைப் பாதையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியதோடு இவரது குடும்பத்தினர்க்குப் பேரிழப்பையும் ஏற்றடுத்தியுள்ளது.

நாட்டுப்பற்றாளர் முருகுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்களின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'